
ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நான் ஏற்கனவே கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனையோ தலைவர்களை சந்தித்து விட்டு இன்றும் நான் களத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் ஏதாவது கிடைக்குமா என்று செய்தியாளர்கள் தேடிக் கொண்டிருக்கையில் எதுவுமே கிடைக்காது என்பதுதான் என்னுடைய பதில். போலீஸ் பாதுகாப்பு நான் கேட்கவில்லை. அவர்களாகத்தான் வீட்டில் முன்பு குவிந்தார்கள்.
எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் செல்கின்றேன். அவர்கள் தான் நமக்கு வழிகாட்டியவர்கள். அவர்கள் தான் என்னை வாழ வைத்தனர். அப்படிப்பட்ட அவர்கள் படம் இல்லாததால் தான் நான் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நான் தெளிவாக இருக்கின்றேன் தன்னலம் கருதாது இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன் தான் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள் என்று செங்கோட்டையன் பேசி உள்ளார்.