பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் ‘விவாகரத்து மனநிலை வரை சென்று மீண்டும் இணைந்து வாழும் தம்பதிகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தம்பதிகள் தங்களது கசப்பான அனுபவங்களையும், மீண்டு வந்த கதையையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் பேசுகையில், தான் அணியும் உடை தொடர்பாகக் கணவர் வீட்டாருக்கும் தமக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். “வீட்டில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்காமல் உடை அணிவதாகக் கூறி, அது கடைசியில் கணவர் என்னைத் தாக்கும் அளவிற்குச் சென்றது. அந்தச் கசப்பான சம்பவத்தால் விவாகரத்து செய்யும் முடிவிற்கே சென்றேன்” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மற்றொரு பெண்மணி பேசுகையில், தனது கணவருக்கு ஏற்பட்ட கடன் சுமைக்குத் தான் தான் காரணம் என அவர் அடிக்கடி சத்தம் போடுவதாகவும், அது தங்களுக்குள் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். பொருளாதாரப் நெருக்கடிகளால் தம்பதிகளுக்குள் ஏற்படும் மனக்கசப்புகள் எவ்வாறு பிரிவினை வரை கொண்டு செல்கின்றன என்பதை இந்த விவாதம் வெளிச்சம் போட்டுக்காட்டியது.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதி ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அவலத்தைப் பகிர்ந்து கொண்டனர். “திருமணத்திற்குப் பின் நீண்ட காலம் எங்களை ஏற்காத குடும்பத்தினர், குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு அழைத்தனர். ஆனால், முதல் நாளிலேயே மருமகளான என்னை வீட்டின் வெளியே படுக்க வைத்தனர் என்று அந்தப் பெண் கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தொகுப்பாளர் ஆவுடையப்பன், அந்தக் கணவரைப் பார்த்து, “உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?” என்று கோபத்தில் கொந்தளித்தார். ஒரு பெண்ணை மதிக்கத் தெரியாத இத்தகைய செயல்கள் சமூகத்தில் இன்னும் நீடிப்பது வேதனையளிப்பதாக அரங்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இவ்வளவு கசப்பான சம்பவங்களையும், அவமானங்களையும் கடந்தும், குழந்தைகள் மற்றும் எதிர்கால நலன் கருதி மீண்டும் இணைந்து வாழத் தொடங்கியுள்ள இந்தத் தம்பதிகளின் மனமாற்றம் குறித்த விவாதம் நேயர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
