2026 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அண்மையில் திருச்சி வந்த அவருக்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரைக்காலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, தனது உரையைத் தொடங்கும் முன் திருநள்ளாறு சனீஸ்வரன் மற்றும் பத்ரகாளி அம்மனை வணங்கினார். உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அவர், புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் மட்டுமே புதுச்சேரி வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்றும் அவர் தொண்டர்களிடையே பேசினார். மேலும் தனது உரையில் தேசிய பாதுகாப்பு குறித்துப் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாக இருந்ததாகவும், அப்போதைய அரசு அதனைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்தார். ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, புல்வாமா தாக்குதலுக்கு வான் வழியாகப் பதிலடி கொடுக்கப்பட்டதோடு, ‘ஆபரேஷன் சிந்தூர் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.