மணிப்பூரில் நிலவி வரும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், குக்கி இனப் பெண்ணைத் திருமணம் செய்த மெய்தி இன இளைஞர் ஒருவர் ஆயுதமேந்திய கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனத்தவரிடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மோதல் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 258 பேர் உயிரிழந்துள்ளனர்; 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அங்கு நிலவிய அசாதாரண சூழல் காரணமாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்த மெய்தி இன இளைஞர் ரிஷிகாந்தா (38), குக்கி இனத்தைச் சேர்ந்த சிங்னு ஹாவோகிப் என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். வன்முறை தொடங்குவதற்கு முன்பே நேபாளத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த ரிஷிகாந்தா, கடந்த வாரம் தான் மணிப்பூர் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை துய்புவாங் என்ற இடத்தில் இருந்த ரிஷிகாந்தாவை, ‘யுனைடெட் குக்கி நேஷனல் ஆர்மி’ என்ற ஆயுதமேந்திய கும்பல் கடத்திச் சென்றுள்ளது. அவரை நட்ஜங் என்ற இடத்திற்குக் கொண்டு சென்று அக்கும்பல் சுட்டுக் கொலை செய்தது.

https://www.instagram.com/reel/DTzk9I6AB3h/?igsh=MnJ3MnM5dHVoMGhx

தன்னைக் கொல்ல வேண்டாம் என்று ரிஷிகாந்தா கெஞ்சும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, 2023 மே மாதம் நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒருவரைக் கூடக் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் தற்போது நடந்துள்ள இந்தக் கொலைச் சம்பவம், மணிப்பூரில் மீண்டும் இன மோதலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.