தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல்  மூலமாக அறிமுகமானார். அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவள் என்றும், 26 வயதான வழக்கறிஞர் எனவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, நந்தினி வாலிபரை காதலிப்பதாக கூறியதால், அந்த மருத்துவர் அதை மறுத்து, அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனையடுத்து, அவருக்கு அடிக்கடி சிலர் போன் செய்து “உங்கள் மீது போக்சோ (POCSO) வழக்கு உள்ளது” என மிரட்ட தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தார். அப்போது அவரை  மீண்டும் தொடர்பு கொண்ட நந்தினி, தனக்கு மாவட்ட நீதிபதி நந்தகுமார், வழக்கறிஞர் ரெஹிர்சன், சென்னையை சேர்ந்த VIP தொடர்புகள் உள்ள முருகேசன் போன்றோர் நண்பர்களாக உள்ளனர் என கூறி, “உங்கள் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன்” என நம்ப வைத்துள்ளார்.

மேலும், டிஎஸ்பி, ஐஜி என கூறி சிலர் தொலைபேசி வழியாக மிரட்ட, நந்தினி தான் உயர் அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்று கூறி, ஜிபே மூலமாகவும் ரொக்கமாகவும் மொத்தம் ரூ.10 லட்சம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வழக்கிலிருந்து விடுபட திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தி, நண்பர்களுடன் சேர்ந்து அந்த மருத்துவரை கடத்தி சென்னையில் சாலையோர கோயிலில் வைத்து நந்தினி அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களிடம் இருந்து  தப்பித்து வந்த மருத்துவர்  தனது பெற்றோரிடம் தகவல் கூறி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். விசாரணையில், எந்த வழக்கும் இவர் மீது பதிவு செய்யப்படவில்லை என்பதும், நந்தினிக்கு 38 வயது என்பதும்,  போலி ஆதார் மூலம் 26 வயதாகப் போல நடித்ததும் அம்பலமானது..

மேலும், 2010ம் ஆண்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நந்தினி மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த புகாரின் பேரில், நந்தினி உட்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து, தேனி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். திருமணம் ஆகாத இளைஞர்களை குறிவைத்து, பணம் பறிக்கும் வகையில் நடக்கும் இம்மாதிரி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.