உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், திருமணமான முதல் இரவிலேயே மணமகன் தனது மணப்பெண்ணால் சரமாரியாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, மணமக்கள் தங்களது முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது மணமகன் தனது மனைவியிடம் நெருங்க முயன்றபோது, மணப்பெண் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மணமகன் வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மணப்பெண், அவரை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் கன்னத்தில் அறைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதல் முற்றிய நிலையில், மணமகளின் குடும்பத்தினரும் அங்கு வந்து மணமகனைத் தாக்கியதில் அவரது மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணமகன், தனக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையில், அந்தப் பெண்ணிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும், அவர் வேறு ஒருவரைக் காதலித்து வந்த நிலையில் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையிடம் பேசிய மணமகளின் சகோதரி, தனது சகோதரிக்கு அந்தப் பையனைப் பிடிக்கவில்லை என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
போலீஸ் ஆய்வாளர் ஜீத் சிங் கூறுகையில், “மணமகள் தன்னைத் தொட அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட கைகலப்பு இது; தற்போது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்திற்கு வந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். திருமணமான முதல் நாளே மணமகன் அடிதடியில் சிக்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.
