ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.. 

சீனாவின் ஹாங்சோவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த இறுதிப் போட்டி இன்று மழையால் ரத்து செய்யப்பட்ட பின்னர், இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. இதையடுத்து ரோஹித் சர்மா அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித், நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ருதுராஜ் கெய்க்வாட்டின் இளம் அணியைப் பாராட்டினார். அப்போது ரோஹித், தன்னால்  நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்ல முடியாது என்று கூறினார்..

ரோஹித் கூறியதாவது, நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன், நான் டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வரும்போது அது அறிவிக்கப்பட்டதை நான் பார்த்தேன். நான் தங்கப் பதக்கம் வென்றதில்லை. ஆனால் எங்கள் அணி அதைச் செய்திருக்கிறது. எனவே, அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். இது நம் நாட்டிற்கு ஒரு பெரிய தருணம், தங்கப் பதக்கம் வெல்வது ஒரு கனவு, நாங்கள் எப்போதும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம், தங்கப்பதக்கம், இன்று நமது கிரிக்கெட் வீரர்கள், பெண்கள் அணி கூட தங்கப் பதக்கம் வென்றுள்ளனர், எனவே, சல்யூட்,” என்று பேசினார்.

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு மழை பெய்ததால் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியவில்லை. இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்,  தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததால், அந்த அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.  

26 வயதில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பதக்கம் வெல்வது கிரிக்கெட் அணிக்கு பெரிய விஷயம் என்பதை ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில், “எங்களுக்கு பதக்கம் வென்று பழக்கமில்லை. நாம் அனைவரும் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறோம். முழு ஆட்டத்தையும் விளையாட முடியாமல் போனது ஏமாற்றமாக இருந்தது, ஆனால் அது எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று”என்று கூறினார்.