உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

2023 உலக கோப்பையின் 4வது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணி முதல் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 என்ற இமாலய இலக்கை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் ராஸ்ஸி வான் டெர் டுசென், குயின்டன் டி காக் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகிய 3 பேர் சதமடித்து அடித்து இலங்கையை நிலைகுலைய செய்தனர்.

இதில் டி காக் 84 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 100 ரன்களும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் (13 பவுண்டரி, 2 சிக்ஸர்) 108 ரன்களும், எய்டன் மார்க்ரம் 54 பந்துகளில் (14 பவுண்டரி, 3 சிக்ஸர்) 106 ரன்களும் எடுத்தனர். மேலும் டேவிட் மில்லர் 21 பந்துகளில் 39 ரன்களும், கிளாஸன் 20 பந்துகளில் 32 ரன்களும் எடுத்து இமாலய இலக்கிற்கு உதவினர்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கையின் துவக்க வீரர்களான பதும் நிசாங்கா மார்கோ ஜான்சனின் 2வது ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின் குஷால் பெரேரா மற்றும் குஷால் மெண்டிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். குஷால் பெரேரா ஒரு புறம் பொறுமையாக ஆடிக் கொண்டிருக்க, மறுமுனையில் குஷால் மெண்டிஸ்  அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தார். பின் தடுமாறிய குஷால் பெரேரா 15 பந்துகளில் 7 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார் குஷால் மெண்டிஸ். இலங்கை அணி 11 ஓவரில் 100 ரன்களை கடந்தது. பின் ரபடாவின் 13 வது ஓவரின் 4வது பந்தில் கிளாஸனிடம் கேட்ச் கொடுத்து குஷால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். குஷால் மெண்டிஸ் 42 பந்துகளில் (4 பவுண்டரி, 8 சிக்ஸர்) 76 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து சமரவிக்ரம 23 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து தனஞ்செய டி சில்வா 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இருப்பினும் மறுமுனையில் மிடில் ஆர்டர் பேட்டர் அசலங்கா தனி ஒருவனாக அரைசதம் அடித்தார். பின் அசலங்காவும் 65 பந்துகளில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வந்த வெல்லலகே டக் அவுட் ஆனார். பின் கடைசியில் கேப்டன் ஷானகா அவரது பங்குக்கு 62 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்ப, ரஜிதாவும் ஒரு 33 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

கடைசியாக பத்திரனா 5 ரன்னில் அவுட் ஆக, இலங்கை அணி 44.5 ஓவரில் 326 ரன்கள் சேர்த்தது. மதுஷன்கா 4 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார். இலங்கை அணி தொடக்கத்தில் நன்றாக ஆடியது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டை விட்டு தோல்வியை சந்தித்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லுங்கி என்கிடி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்க அணியின் சாதனைகள் :

இந்த போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. இப்போட்டியில் எய்டன் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை நிகழ்த்தினார். இதுவரைஉலக கோப்பையில் 2011 உலக கோப்பையில் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்..  மேலும் 48 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் 3 வீரர்கள் சதமடித்தது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமில்லாமல் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச  ஸ்கோர் ஆகும். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் 417 என்ற இலக்கை முறியடித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்கா தனது உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் 400 ரன்களைக் கடந்தது, உலகக் கோப்பைப் போட்டியில் அவர்கள் அவ்வாறு செய்வது இது 3வது முறையாகும். தென்னாப்பிரிக்கா 8வது முறையாக ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமான ஒருநாள் உலகக் கோப்பை சதம் :

49 – தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் எதிராக இலங்கை, 2023 இல் டெல்லி

50 – அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் எதிராக இங்கிலாந்து, 2011 இல் பெங்களூரு

51 – ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் vs இலங்கை, சிட்னி 2015

52 – தென்னாபிரிக்கா ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், சிட்னி 2015

உலகக் கோப்பையில் அதிக 400+ மொத்தங்கள்

தென்னாப்பிரிக்கா – 3*

இந்தியா – 1.

ஆஸ்திரேலியா – 1.

உலகக் கோப்பைகளில் அதிக ஸ்கோர் :

428/5 – தென்னாப்பிரிக்கா – எதிரணி இலங்கை (டெல்லி 2023)

417/6 – ஆஸ்திரேலியா –  எதிரணி ஆப்கானிஸ்தான் (பெர்த் 2015)

413/5 – இந்தியா – எதிரணி பெர்முடா (போர்ட் ஆஃப் ஸ்பெயின் 2007)

411/4 – தென்னாப்பிரிக்கா – எதிரணி அயர்லாந்து (கான்பெரா 2015)

408/5 –  தென்னாப்பிரிக்கா – எதிரணி வெஸ்ட் இண்டீஸ் (சிட்னி 2015)