ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரமான தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளே போர்க்களமாக மாறியுள்ள நிலையில், லத்வியாவைச் சேர்ந்த மெரினா ஜில்லா என்ற ஆங்கில ஆசிரியை செய்த காரியம் இணையத்தையே அதிர வைத்துள்ளது. போர் பயத்தால் மக்கள் அனைவரும் துபாயை விட்டு வெளியேறத் துடிக்கும் சூழலில், மெரினா தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வேலைக்காக ரீகாவிலிருந்து துபாய்க்கு துணிச்சலாக விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால் அவர் விமானத்திற்குள் சென்ற போது அங்கிருந்த காட்சியைப் பார்த்து அவரே உறைந்து போய்விட்டார். அந்த பிரம்மாண்டமான கமர்ஷியல் விமானத்தில் மெரினாவைத் தவிர வேறு ஒரு பயணி கூட இல்லை.

​மார்ச் 8, 2026 அன்று நடந்த இந்தப் பயணத்தில், அந்த விமானமே மெரினாவுக்காக மட்டும் இயக்கப்பட்டது போல ஒரு உணர்வைத் தந்துள்ளது. விமானத்தில் இருந்த நான்கு பணிப்பெண்களும் அவருக்காகவே பணிவிடை செய்துள்ளனர், மேலும் விமானத்தின் பைலட் நேரடியாக மெரினாவிடம் வந்து பேசி, விமானம் தாமதமானதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில், மெரினா துணிச்சலாக துபாயில் இறங்கி தனது வேலையில் சேரத் தயாராகியுள்ளார். “ஊரே பயந்து ஓடும் போது இவருக்கு இவ்வளவு தைரியமா?” என மெரினாவின் இந்த ‘தனி ஒருத்தி’ பயண வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!