மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல் இப்போது உலகப்போருக்கான தொடக்கமாக மாறியுள்ளது. கடந்த 14 நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில் அமெரிக்காவும் நேரடியாகக் குதித்துள்ளதால் நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கியதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் துல்லியத் தாக்குதல்களுக்குப் பின்னால் ரஷ்யாவின் உளவுத் தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது. “அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் தளங்களின் ரகசிய லொகேஷன்களை ரஷ்யா தான் ஈரானுக்குக் கொடுத்தது” என அமெரிக்க அதிகாரிகள் கொந்தளித்து வருகின்றனர்.
இருப்பினும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையேயான தொலைபேசி உரையாடலில், இந்தக் குற்றச்சாட்டுகளை புதின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒருபுறம் ரஷ்யா மறுப்புத் தெரிவித்தாலும், மறுபுறம் சீனா வெளிப்படையாகவே ஈரானுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளது. ஈரானுக்கு சுமார் 2 லட்சம் டாலர் நிதியுதவி வழங்குவதுடன், தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்வோம் எனச் சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாமல் ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்குப் பின்னால் நிற்பது, உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. “அடுத்தது என்ன நடக்குமோ?” என உலகமே இப்போது திக் திக் நிமிடங்களில் காத்துக் கொண்டிருக்கிறது!
