முக்கனிகளில் முதலாவதான மாம்பழங்களின் சீசன் தொடங்கிவிட்டாலே சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வாடிக்கையாளர்களின் அதீத தேவையையும், கவனக்குறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பழ வியாபாரிகள் சிலர் மிக நூதனமான முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் அரங்கேறி வரும் இந்த மோசடி, ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சந்தைகளில் பழங்கள் வாங்கச் செல்லும் மக்கள், நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து எடைபோடக் கொடுப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில மோசடி வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் கண்கள் பதியாதவாறு தங்களது எடை தராசில் ஏற்கனவே அழுகிய மற்றும் தரம் குறைந்த கெட்ட மாம்பழங்களை முன்கூட்டியே மறைத்து வைத்து விடுகின்றனர்.

நாம் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் நல்ல பழங்களை அவர்கள் எடைபோடும் போது, தந்திரமாக அந்த அழுகிய பழங்களின் எடையையும் சேர்த்து கணக்கிட்டு விடுகின்றனர். அதுமட்டுமின்றி, எடையைப் பார்த்துவிட்டு நாம் பணத்தைக் கொடுக்கும் அந்தச் சில விநாடி கவனச்சிதறலைப் பயன்படுத்திக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் நல்ல பழங்களுக்குப் பதிலாக அந்த அழுகிய பழங்களை நமது பைக்குள் மாற்றிப் போட்டு அனுப்பிவிடுகின்றனர்.

மாம்பழங்களை ஆசை ஆசையாக நல்ல விலை கொடுத்து வாங்கிவிட்டு, வீட்டிற்குச் சென்று பையைத் திறந்து பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமும், கடுமையான மன உளைச்சலும் மட்டுமே மிஞ்சுகிறது. “வாங்குவது நம் பணம், ஏமாறுவது நம் உரிமை” என்றில்லாமல், “எழு வாடிக்கையாளரே எழு!” என்ற விழிப்புணர்வு முழக்கத்தோடு சமூக ஆர்வலர்கள் இந்த மோசடியைத் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.

“>

இனி சந்தைகளுக்குச் சென்று பழங்கள் வாங்கும்போது, வியாபாரிகள் எடைபோடும் தராசையும், அவர்கள் பைகளில் பழங்களை எடுத்துப் போடும் கை அசைவுகளையும் வாடிக்கையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.