பெற்ற மகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஒரு பாசக்காரத் தந்தைக்கு, அந்த மகளே தன் காதலனுக்காகத் துரோகம் இழைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அம்பலமாகியுள்ளது.
தனது ஏழைக் காதலனை ஒரே இரவில் கோடீஸ்வரனாக்கத் திட்டமிட்ட மகள், தனது சொந்த வீட்டிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டிய விபரீதம் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது இம்ரான். பெரும் தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த மே 10-ஆம் தேதி இரவு புகுந்த ஒரு கொள்ளைக் கும்பல், இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ. 1.2 கோடி ரொக்கப் பணம் மற்றும் ஆறு தோலா தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
ஒவ்வொரு கதவிலும் அதிநவீன டிஜிட்டல் பூட்டுகள் கொண்ட இம்ரானின் மாளிகைக்குள் எப்படி கொள்ளையர்கள் நுழைந்தனர் என்ற மர்மம் போலீசாரைக் குழப்பியது. விசாரணையில், டிஜிட்டல் பூட்டு உள்ளிருந்து திறக்கப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இம்ரானின் மகள் அரிபாவின் செல்போனைப் பறிமுதல் செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஒட்டுமொத்த உண்மையும் வெளிவந்து போலீசாரையே அதிர வைத்தது. அரிபா கடந்த 8 ஆண்டுகளாக அர்ஷத் என்ற ஏழை வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால், அர்ஷத் ஏழையாக இருந்ததால் அவரைத் திருமணம் செய்ய அரிபாவின் தந்தை சம்மதிக்க மாட்டார் என்று அஞ்சிய அரிபா, தனது காதலனைப் பணக்காரனாக்கத் தனது சொந்த வீட்டிலேயே கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளார். திட்டத்தின்படி, சம்பவத்தன்று நள்ளிரவில் அரிபா வீட்டின் டிஜிட்டல் கதவை உள்ளிருந்து திறந்து விட, அவளது காதலன் அர்ஷத் மற்றும் அவனது நண்பர்கள் ஒன்பது பேர் வீட்டிற்குள் புகுந்து இந்த மெகா கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
தற்போது அரிபா மற்றும் அவளது காதலன் அர்ஷத் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும் பகுதிப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைபேசி அழைப்பு விவரங்கள், தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுடன் போலீசார், அதனை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
