
ஒடிசாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்) தொடங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா வியாழக்கிழமை அறிவித்தார்.
புவனேஸ்வரின் மஞ்சேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் பயனாளிகள் 25 கிலோ அரிசியை எந்திரத்திலிருந்து பெற முடியும். இந்த திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் பத்ரா தெரிவித்தார்.
அரிசி ஏடிஎம் என்பது அரிசி மோசடி மற்றும் டீலர்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கை என்றும், இது அரிசியைப் பெறுவதற்கான நேரடி முறையை வழங்குகிறது என்றும் அமைச்சர் பத்ரா கூறினார். மேலும், சுமார் 50 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு மட்டுமே பயன்கள் கிடைக்கும் வகையில் இந்த போலி கார்டுகளை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்குள் தகுதியான குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முந்தைய அரசு சந்தேகத்திற்குரிய நடைமுறைகளுடன் PDS டீலர்களை நியமித்ததாகவும், இதை சரிசெய்ய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், ஒடிசா PDS டீலர் சங்கம் இந்த குற்றச்சாற்றுகளை மறுத்துள்ளது. டீலர்கள் நியமனம் அரசின் விதிமுறைகளின்படி வெளிப்படையாக நடத்தப்பட்டதாகவும், மோசடியை தடுக்க பயோமெட்ரிக் மற்றும் ஐரிஸ் ஸ்கேன் அமைப்புகள் உள்ளதாகவும் ஒடிசா PDS டீலர் சங்கத்தினர் கூறினர்.