உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் சாஜர்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அங்கு சம்பவ நாளில் புல்டோசர் ஒன்று வந்தது. அதை ஓட்டி வந்த வாலிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள்  கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்கச்சாவடியை புல்டோசர் மூலம் உடைத்தார். அவர் கட்டணம் வசூலிக்கும் இரண்டு மையங்களை உடைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதே சுங்கச்சாவடியில் கடந்த வாரம் சுங்க கட்டணம் கேட்டதற்காக ஊழியர் மீது காரை ஒருவர் ஏற்றிய கொடூரம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.