சிங்கம் காட்டின் ராஜா என்றாலும், யானையின் ஆதிக்கம், குறிப்பாக கோபமுற்ற யானை ஏற்படுத்தும் அச்சம் அதை விடப் பெரியதாக இருக்கிறது. பெரும்பாலும் காடுகளிலேயே வாழும் யானைகள், உணவு தேடி சில நேரங்களில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கும் நுழைவது வழக்கமாகிவிட்டது. அதனைச் சுட்டிக்காட்டும் வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பசியுடன் வந்த யானை, சாலையோரத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்து, அரிசி மூட்டைகள், சாண்ட்விச்கள் மற்றும் நிறைய வாழைப்பழங்களை எடுத்துச் செல்வதைக் காணலாம்.

காணொளியில், யானையை பார்த்ததும் கடைக்காரர் பின்வாங்குகிறார். பின்னர், யானை மிகவும் அமைதியாக கடைக்குள் நுழைந்து, தனக்குப் பிடித்த உணவுகளை தேர்வு செய்து எடுத்துக்கொள்கிறது. இந்த காட்சிகள் 43 வினாடிகளில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை சமூக ஊடக தளமான ‘X’ ல், @gunsnrosesgirl3 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். அதில்,  “யானை தாய்லாந்தில் உள்ள கடைக்குள் நுழைந்து, அரிசி , ஒரு சாண்ட்விச் மற்றும் நிறைய வாழைப்பழங்களை எடுத்தது,” என எழுதியுள்ளார்.

 

இந்த காணொளி இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் விரும்பியுள்ளனர். சிலர் நகைச்சுவையாக, “யானை சகோதரா, நீங்கள் பணமாகவோ, அல்லது UPI மூலமாகவோ பணம் செலுத்துவீர்களா?” எனக் கேள்வி எழுப்ப,
மற்றொருவர், “இது காட்டின் ATM போலிருக்கிறது; பசி எடுத்தப்போ அங்கேயே வந்தேன்!” என கருத்து பதிவு செய்துள்ளார்.

ஆனால், சில பயனர்கள், “யானை கடைக்காரரின் பல பொருட்களை சேதப்படுத்தியிருக்கலாம்” எனவும், “விலங்குகளுக்கு உணவளிக்க பாதுகாப்பான வழிகள் தேவை” என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும்  தாய்லாந்து, ஆசிய யானைகளின் 15%க்கு மேற்பட்ட யானைகள் வாழும் நாடாக கருதப்படுகிறது.