
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மைலேரிபாளையம் கற்பகம் பொறியியல் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்ற மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி இருக்கிறார். நேற்று மாலை விடுதியின் நான்காவது மாடியில் இருந்து பிரபு திடீரென கீழே குதித்ததால் அவரது கை கால்கள் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார். அவரை சக மாணவர்களும் விடுதி நிர்வாகத்தினரும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர் மேல் சிகிச்சைக்காக கங்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபு பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும், சூப்பர் பவர் இருப்பதாக கற்பனையில் நினைத்தது தெரியவந்தது. அந்தப் பவரை வைத்து எந்த கட்டிடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என பிரபு அடிக்கடி தனது நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். நேற்று விபரீத விளையாட்டாக மாடியில் இருந்து குதித்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.