அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்ததோடு, அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ஈரான் ராணுவம், அமெரிக்கா தங்களை அச்சுறுத்த நினைத்தால் அவர்களின் உலகத்திற்கே தீ வைப்போம் என எச்சரித்தது.
ஈரானின் இந்த மிரட்டலுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனக்கோ அல்லது அமெரிக்காவிற்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்குப் பின்னணியில் ஈரான் இருப்பது தெரிந்தால், அந்த நாடே பூமியில் இல்லாதவாறு அமெரிக்கப் படைகள் அழித்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் மாறிமாறி விடுத்து வரும் இத்தகைய போர்க்கால எச்சரிக்கைகளால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
