இணையத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் திவாகர். குறிப்பாக, ‘கஜினி’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்துக் காட்டி, தனக்குத் தானே ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் கொடுத்துக் கொண்டார்.
தனக்கு நடிப்புத் திறமை இருப்பதாகவும், தான் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்று அவர் நேர்காணல்களில் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட திவாகர், அங்குப் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், சாதி ரீதியாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
30 வயதைக் கடந்தும் தனக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று திவாகர் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் பேசி வந்த நிலையில், அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், திவாகர் கோட் சூட் அணிந்து, கழுத்தில் மாலையுடன் ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார்.
மேலும், பின்னணியில் உள்ள திருமண மேடை அமைப்பில், “2018ஆம் ஆண்டு, ஜூன் 4ஆம் தேதி” என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திருமணப் புகைப்படம் உண்மையா அல்லது வேறு ஏதேனும் நிகழ்வு தொடர்பானதா என்பது குறித்த திவாகரின் விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. இந்த மர்மமான புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
