கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீனை, சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஓஜி கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர். அவருடன் சேர்த்து சீனிவாசன், சரத் என்ற மேலும் மூன்று பேர் இந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயாரிப்பாளர் சர்புதீன் வீட்டில், ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விருந்துகளில் சினிமா பிரபலங்கள் மற்றும் மாடலிங் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சர்புதீனின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, ரூ.27 லட்சம் பணம் மற்றும் மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட இந்த ரூ.27 லட்சம் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சர்புதீன் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதும், அந்தப் பணம் அந்நிறுவனத்தைச் சேர்ந்ததுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் விசாரணை அதிகாரிகளிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வழக்கில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட தேர்தல் வியூக நிறுவனத்தின் பணம் சிக்கியிருப்பது, இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
