தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடைசிப் படமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கௌதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரவிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான “தளபதி கச்சேரி” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வெளியாகும் கடைசிப் படமாகக் கருதப்படுவதால், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும் பேச்சு, அரசியல் மற்றும் திரைத்துறை என இரு துறைகளிலும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
