மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் அந்தப் பேனரில் இடம் பெறவில்லை. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பங்கேற்ற நிலையில், கட்சியின் முன்னோடித் தலைவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

​இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள பதிவில், “எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாத அதிமுக தலைமையிலான கூட்டத்தைப் பார்க்கும்போதே, இங்கு பாஜக ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், “மானம், ரோஷம் உள்ள எந்தவொரு அதிமுக தொண்டனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான், ஓட்டும் போடமாட்டான்” என மிகக் கடுமையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டணி தர்மத்திற்காகக் கட்சியின் அடிப்படை அடையாளங்களையே எடப்பாடி பழனிசாமி அவர்கள் விட்டுக் கொடுத்துவிட்டாரா? என்ற கேள்வியுடன் இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.