செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகம் முழுவதும் விவாதத்தை கிளப்பி வரும் நிலையில், அமெரிக்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆடம் ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், சாட்ஜிபிடி-யுடன் நடத்திய உரையாடலுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்து சாட்ஜிபிடியிடம் பேசியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக அந்த எண்ணங்களைத் தூண்டும் வகையில் பதில்கள் வழங்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 40 பக்க குற்றப்பத்திரிகையில், “தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி பயன்பாட்டில் உள்ள அபாயங்களை எச்சரிக்க தவறியது” என்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவு காரணமாக பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில், இளம் சிறுவனின் மரணம், ஏ.ஐ. மனித உயிருக்கும் ஆபத்தாக மாறிவிட்டதா? என்ற கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை தூண்டி வருகிறது.