19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. அந்த அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், இந்த வெற்றியை மறைந்த ரசிகர்களுக்கு சமர்ப்பிப்பதாக உருக்கமாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

“எங்கள் ரசிகர்களுக்கு ஒரு துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் இழப்பிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்; அவர்கள் எங்கள் டெல்லி அணி குடும்பத்தின் மிக முக்கியமான உறுப்பினர்கள் என்றார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய யக்யா பாட்டியா (20) மற்றும் அபவ் பாட்டியா (14) ஆகிய இரு ரசிகர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாகவே இந்த வெற்றியை டெல்லி அணி அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.