2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். வருமானவரி விலக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இப்படியான நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கும் பீகாருக்கு நன்றி கடனாகத்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தெற்கில் இருக்கக்கூடிய கூட்டணி ஆட்சிக்கு எதுவுமே செய்யவில்லை. ஏன், ஆந்திராவிற்கு கூட இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் கிடையாது. கூட்டணி கட்சிகளுக்கு கூட வடக்கு மற்றும் தெற்கு என பாஜக பாகுபாடு காட்டுகின்றது. மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானதாகத்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தென் மாநிலங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளும் அபாயம் உள்ளது. வளர்ந்த மாநிலங்களையும் பின்தங்கிய நிலைக்கு மாற்றாதீர்கள் என்று கனிமொழி காட்டமாக பேசியுள்ளார்.
