காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா உடனடியாக ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதர், காசாவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாகவும், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவக் கருவிகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டார். “இந்த இக்கட்டான சூழ்நிலையில், உலக அளவில் பெரிய நாடான இந்தியாவை விட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?” என்று அவர் மிகுந்த மனவேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் இந்தியாவின் ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தை அவர் பெரிதும் பாராட்டியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் அவசர கால மருத்துவப் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக் கருவிகளை இந்தியா உடனடியாக வழங்கி, காசாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வரலாற்று ரீதியாக இந்தியா எப்போதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அசாதாரண சூழ்நிலையிலும் இந்தியாவின் உறுதியான ஆதரவையும், மனிதாபிமான உதவிகளையும் தங்களது நாடு பெரிதும் எதிர்பார்ப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
