தமிழகத்தில் மறைமுகமாக மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்கள் அனைத்தும் தீவிரமாக ஆராயப்பட்டு, அதற்குரிய தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாக மின் வாரியம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

​குறிப்பாக, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ள மின் வாரியம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள விகித அடிப்படையில்தான் தற்போதும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது. தமிழகத்தில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 23 லட்சமாக உள்ள நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் சுமார் 2.23 கோடி குடும்பங்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவதாகவும் மின் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.