முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இது தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மேற்கொண்ட துபாய் பயணத்துக்கு பின் தமிழகத்தில் எந்த முதலீடும் வரவில்லை.

தற்போதும் அதேபோன்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக என கூறி வெளிநாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்றுள்ளார் என விமர்சித்தார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்ததாவது, எடப்பாடி பழனிசாமி திமுகவின் திராவிட மாடல் அரசை குறைகூற எந்த தார்மீக உரிமையும் இல்லாதவர் என சாடியுள்ளார். மேலும் பல காரணங்களையும் அவர் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளார்.

அதாவது, அ.தி.மு.க ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர்தான் பழனிசாமி. 4 ஆண்டு கால ஆட்சியில் ஊரெங்கும் ஊழல் எனும் முழக்கத்துக்கு சொந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து, ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்ந்தவர் பழனிசாமி என்று தங்கம் தென்னரசு கூறினார்.