விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று சொல்லும் பா.ஜ.க தான் காங்கிரஸின் உண்மையான எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒரு சில காங்கிரஸ்காரர்கள், காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலை’, காங்கிரசை அழிக்கத் துடிக்கும் உ.பி.யின் ‘புல்டோசர் மாடலோடு’ ஒப்பிடுவது வேதனையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியின் கடன் சுமை குறித்தும், மத்திய அரசின் அதிகார அத்துமீறல்கள் குறித்தும் கேள்வி கேட்க வேண்டியவர்கள், சிறப்பாகச் செயல்படும் மாநில அரசுக்கு எதிராகப் பேசுவது முறையல்ல என்று அவர் சாடியுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி அவர்கள் பெரியார் வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரசுக்குள் இருக்கும் சிலரோ இன்னமும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையோடு செயல்படுவதாக ஆளூர் ஷா நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். “ஆதிக்கவாதிகளின் கூடாரம் காங்கிரஸ்” என்று பெரியார் வெளியேறி நூறு ஆண்டுகள் ஆன பின்பும், அதே ஆதிக்கச் சிந்தனை கொண்டோர் இன்னும் கட்சிக்குள் இருப்பதுதான் காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் என்று அவர் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வலிமையான கூட்டணியைச் சிதைக்கத் துடிக்கும் இத்தகையச் செயல்பாடுகள் பா.ஜ.க-வின் எண்ணத்திற்கே துணை போகும் என்றும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
