பிரிட்டனின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த 33 வயதான சார்லோட் போவர்ஸ் என்பவரது வீட்டில், சார்ஜ் போடப்படாத நிலையில் இருந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் இந்த பிரஷ்ஷை அவர் வாங்கியதாகவும், சுமார் எட்டு மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றிப் பயன்படுத்தி வந்த நிலையில், பிப்ரவரி 2026-ன் ஒரு காலை வேளையில் அது தானாகவே வெடித்து தீப்பிடித்தது தெரியவந்தது.

இந்த விபத்தின் போது பாத்ரூமின் சுவர்கள் கருகி சேதமடைந்த போதிலும், அங்கிருந்த கண்ணாடியின் ஸ்டீல் பிரேம் தீ மேலும் பரவாமல் தடுத்ததால், தான் உயிர் பிழைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்று அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய அந்தப் பெண் சுமார் 267 டாலர்கள் செலவு செய்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் வெறும் 46 டாலர்கள் இழப்பீடு அல்லது புதிய பிரஷ் வழங்குவதாகக் கூறியது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக சார்ஜ் செய்யும் போது மட்டுமே இத்தகைய மின்சாதனங்கள் வெப்பமடைந்து விபத்து ஏற்படும் என்று கருதப்படும் நிலையில், எவ்வித இணைப்பும் இன்றி டூத் பிரஷ் வெடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகு இனி ஒருபோதும் எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்படுத்தப் போவதில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் மின்சாதனங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.