உலகிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவூதி அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள அராம்கோ ஆலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஏவிய ட்ரோன்கள் மூலம் சவூதி ஆற்றல் மையமான ராஸ் தனுரா ஆலை தாக்கப்பட்டது. இது ஷாஹத்-136 ரக ட்ரோன்களாக இருக்கலாம் என சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.  தாக்குதலின் விளைவாக ஆலையில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.

அதிர்ஷ்டவசமாக, இந்தத் தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை காலை ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ராஸ் தனுரா, உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றாகும். தினசரி 550,000 பேரல்களுக்கு மேல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கிருந்து ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.