மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, வடகொரியா ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியா அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து இன்று மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டுள்ளன. பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்யும் வடகொரியா, இந்த முறை சுமார் 10 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி தனது பலத்தைக் காட்டியுள்ளது. இது வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கிச் சீறிப் பாய்ந்தன. இவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதாரக் கடல் மண்டலத்திற்கு (EEZ) வெளியே விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்யவும், நிலைமையைக் கண்காணிக்கவும் ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் அவசரகாலக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவே வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. “இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று வடகொரியா ஏற்கனவே விடுத்திருந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

மேலும் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை வடகொரியா ஏற்கனவே கடுமையாகக் கண்டித்திருந்தது. இந்தச் சூழலில், தனது ஏவுகணை பலத்தை நிரூபிப்பதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.