இந்தியாவில் மருத்துவ வசதிகள் சரிவர சென்று சேராத பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவத்தின போர்ட்டபிள் மருத்துவமனையை சோதித்துள்ளனர். உலகில் முதல்முறையாக இந்திய ராணுவத்தினர் தான் போர்ட்டபிள் மருத்துவமனையை உருவாக்கி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில்  ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப் எனப்படும் இந்த போர்ட்டபிள் மருத்துவமனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது காடு மற்றும் மலை என எந்த பகுதியாக இருந்தாலும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பேரிடர் மற்றும் இயற்கை சிக்கல் நிறைந்த காலங்கள், மனிதாபிமான நெருக்கடி காலங்கள் மற்றும் சிக்கலான நிலப்பரப்புகள் போன்றவைகளில் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது 15 ஆயிரம் அடி உயரத்திற்கு இந்திய வான் வழிப்படையும், ஆயுதப்படையும் சேர்ந்து எடுத்துச் சென்று நிலை நிறுத்தியது. அதாவது லடாக்கில் உள்ள ஒரு பகுதியில் பாராசூட் மூலமாக போர்ட்டபிள் மருத்துவமனையை உயரத்திற்கு எடுத்துச் சென்றனர். இது ஒரு மைல் கல் சாதனை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.