சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் நேற்று கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, நமது உலகம் பல முனைகளில் புயலால் பாதிக்கப்பட்டது போல் தொடர் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் குறுகிய கால சர்வதேச பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகள் பொருளாதார பின்னடைவை சந்தித்தது. அதேபோல் ஒட்டுமொத்த உலகமும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று இன்னும் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது.

பருவநிலை மாற்றமும் ஏற்கனவே சவாலாக இருக்கிறது. பசுமை குடில் வாயு வெளியேற்றம் சாதனை அளவை தாண்டிக் கொண்டிருக்கிறது. அதனால் வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதன் விளைவு பயங்கரமாக இருக்கும். மேலும் பூமியின் பெரும்பாலான பகுதிகள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிடுகிறது. இதனால் பலருக்கு இது ஒரு மரண தண்டனையாக இருக்கும். புதை படிம எரிபொருளுக்கு அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.

இது இயற்கைக்கு எதிரானது. மேலும் வன்முறை போர் போன்றவேயும் சவாலாக இருந்து வருகிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது கடினம். இருப்பினும் பாதிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாவது பருவநிலை, தொழில்நுட்பம், வர்த்தகம் போன்றவற்றில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து  செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.