ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் பஞ்ச்’ என்ற உலகப் புகழ்பெற்ற குட்டி குரங்கின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயால் கைவிடப்பட்ட ‘பஞ்ச்’ என்ற இந்த ஒன்பது மாதக் குரங்கு, தனது தனிமையைப் போக்க ஒரு பொம்மை ஒராங்குட்டானைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோக்கள் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாகி உலக மக்களின் இதயங்களை வென்றது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கிரிப்டோகரன்சி விளம்பரத்திற்காக மஞ்சள் நிற எமோஜி (Emoji) ஆடை அணிந்த 24 வயதுடைய அமெரிக்க இளைஞர் ஒருவர், குரங்குகள் வாழும் பகுதியின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே குதித்துள்ளார். அவரோடு வந்த 27 வயதுடைய மற்றொரு அமெரிக்கப் பயணி இதனைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

“>

மேலும் இவர்களின் இந்த விசித்திரமான செயலால் அங்கிருந்த குரங்குகள் பயந்து சிதறி ஓடின. மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அத்துமீறிய நபரை விலங்குகளின் அருகே செல்லவிடாமல் தடுத்து நிறுத்திப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜப்பானிய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விசாரணையில் அவர்கள் தங்களது அடையாளங்களை மறைக்க முயன்றதாகக் கூறப்படும் நிலையில், வணிக நடவடிக்கைகளுக்குத் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் ‘பஞ்ச்’ வாழும் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், அங்கு பார்வையாளர்கள் வீடியோ எடுப்பதற்கும் தற்காலிகத் தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.