2026 டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தது. இந்தத் தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய வீரர் திலக் வர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து தனது சொந்த ஊரான ஐதராபாத்திற்கு திரும்பிய திலக் வர்மாவை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ‘PEDDI’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற திலக் வர்மா, அங்கு நடிகர் ராம் சரணை சந்தித்து ஆசி பெற்றார். திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டிய நடிகர் ராம் சரண், அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கி கௌரவித்தார்.
