ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பியூஷ் (14) மற்றும் அவரது உறவினர் பிக்ஷித் ராணா (19) ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 22-ம் தேதி பர்மணி மாதா கோயிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு வீடியோ எடுக்கச் சென்றபோது, திடீரென ஏற்பட்ட பயங்கர பனிப்புயலில் சிக்கி இருவரும் மாயமாகினர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புக் குழுவினர் நான்கு நாட்கள் கழித்துதான் அந்த இடத்திற்குச் செல்ல முடிந்தது. அங்கு அவர்கள் கண்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
4 அடிக்கும் மேலான பனிக்கு அடியில் பியூஷின் உடல் புதைந்திருக்க, அதன் அருகிலேயே அவரது வளர்ப்பு நாயான பிட்புல் (Pitbull) நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது.
சுமார் -10 டிகிரி குளிரில், பசியையும் தாகத்தையும் தாங்கிக்கொண்டு அந்த நாய் நான்கு நாட்களாக அங்கேயே இருந்துள்ளது. மீட்புக் குழுவினர் உடலை எடுக்க முயன்றபோது, அவர்களை அண்ட விடாமல் அந்த நாய் ஆக்ரோஷமாகத் தடுத்துள்ளது.
யாரோ தன் உரிமையாளருக்குத் தீங்கு செய்ய வருகிறார்கள் என்று நினைத்து அது காட்டிய விசுவாசம் அனைவரையும் வியக்க வைத்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த நாயைச் சமாதானப்படுத்தி, உடல்களுடன் சேர்த்து அந்த நாயும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது.
