மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையின் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்ணும் அவருடைய வயிற்றிலிருந்த சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குச் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாயும் சேயும் ஒரே நேரத்தில் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணை ஆய்வு செய்த மருத்துவக் குழுவினர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், மருத்துவர்களின் மெத்தனப் போக்கினாலும் கவனிப்பாரற்ற சூழலாலும் கர்ப்பிணிப் பெண்ணின் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது.

இறுதியில், வயிற்றிலிருந்த பிஞ்சு உயிருடன் சேர்த்துத் தாயின் உயிரும் பிரியும் சூழல் உருவானது. மருத்துவமனையின் வெளிப்புறத்தில் திரண்டிருந்த உறவினர்கள், தாயும் சேயும் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நெஞ்சம் கதறி அழுத காட்சி காண்போரின் இதயத்தைப் பிளப்பதாக அமைந்தது.

மருத்துவர்களின் அலட்சியமே இந்த இரட்டை உயிரிழப்பிற்குக் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையிலேயே இத்தகைய கொடூரம் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் மருத்துவத் துறையின் மீது சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.