ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வாயடைக்க வைத்துள்ளது.

வெறும் 37 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 103 ரன்களை விளாசித் தள்ளிய வைபவ், 36 பந்துகளிலேயே சதமடித்து ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரரின் இரண்டாவது அதிவேக சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 228 ரன்கள் குவித்த போதிலும், இஷான் கிஷன் (74) மற்றும் அபிஷேக் ஷர்மாவின் (57) அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு வைபவ்விடம் பேசிய இஷான் கிஷன், “தம்பி.. கொஞ்சம் பார்த்துப் பண்ணுப்பா, உன்னோட சீக்ரெட் எல்லாம் எனக்குத் தெரியும், என் டீமுக்கு எதிரா ஆடும்போது கொஞ்சம் கருணை காட்டு” என ஜாலியாகக் கலாய்த்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், வைபவ்வை “தலைமுறைக்கு ஒருமுறை பிறக்கும் அபூர்வத் திறமை” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். பட் கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்ட வைபவ்-ன் துணிச்சல், அவரை ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.

“15 வயதில் கலி கிரிக்கெட் ஆடுவது போல ஐபிஎல்-லில் ஆடுகிறார், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார்” என கைஃப் சிலாகித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சீசன்களில் இரண்டு சதங்கள், அதுவும் 250-க்கும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசியுள்ள இந்த சிறுவன், தற்போதைய ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளார்.