வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைத் தழுவிய நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்த விதம் மற்றும் வங்கதேச வீரர் அவரை வம்புக்கு இழுத்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் அணி 268 ரன்கள் என்ற இலக்கை நோக்கித் தடுமாறிக் கொண்டிருந்தபோது ரிஸ்வான் களமிறங்கினார். அப்போது அவரை நிலைகுலையச் செய்ய வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் எல்லை மீறிய வகையில் கிண்டல் செய்தார். சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாமிடம் அவர் வங்க மொழியில் பேசியதாவது, “இப்போது இவர்கள் போட்டியை டிரா செய்யவே விளையாடுவார்கள். இவனுக்கு (ரிஸ்வான்) பாகிஸ்தானில் இப்போது எந்த மரியாதையும் இல்லை. ஒருவேளை பெரிய ஷாட் அடித்து அவுட்டானால், இவனால் சொந்த நாட்டிற்கே திரும்ப முடியாது. அந்தளவுக்கு இவன் பெயர் கெட்டுப்போய் கிடக்கிறது.
லிட்டன் தாஸ் பேசியது ரிஸ்வானுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை, ஆனால் இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. லிட்டன் தாஸ் இப்படிப் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரிஸ்வான் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நாஹித் ராணா வீசிய பந்து நேராக ஸ்டம்பை நோக்கி வந்தது. ஆனால், அந்தப் பந்தை அடிக்க முயலாமல் ரிஸ்வான் வினோதமான முறையில் பேட்டைத் தூக்கிக் கொண்டு பந்தை விட்டார். பந்து நேராக ஸ்டம்பைத் தகர்த்தது. தான் அவுட்டானதை நம்ப முடியாமல் ரிஸ்வான் திகைத்து நின்ற காட்சி ரசிகர்களிடையே கேலிக்குள்ளாகியுள்ளது.
ILitton to Taijul: “Rizwan’s reputation is really bad back in Pakistan. If he gets out trying to hit a big shot, he won’t even be able to set foot back in the country-his reputation is that bad!” 🤣☠️
LOL Litton Das is trolling the hell out of Rizwan🤣🤣.#BanvsPak pic.twitter.com/aiwMUzpGPo
— ᴿʸᴬᴺ ᴿᴬᴴᴹᴬᴺ🇧🇩 (@oiiii_butch) May 12, 2026
முதல் இன்னிங்ஸில் 59 ரன்கள் எடுத்த ரிஸ்வான், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 163 ரன்களுக்குச் சுருண்டு, 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. சொந்த நாட்டிலேயே ரிஸ்வானின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், எதிரணி வீரரே அவரைப் பொதுவெளியில் கிண்டல் செய்தது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
