சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன், இந்த ஐபிஎல் சீசனில் தனது சிறப்பான பந்துவீச்சால் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 3 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுவரை 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரை, “ஓவர்டனுக்கு சிலை வைக்க வேண்டும்” என்று சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய பேட்டியில் பேசிய ஓவர்டன், சிஎஸ்கே அணியில் விளையாடுவது ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “இங்கிலாந்தில் கூட ரசிகர்கள் எனது பெயரை இவ்வளவு சத்தமாக முழங்கியதில்லை, ஆனால் சென்னை ரசிகர்கள் காட்டும் அன்பு பிரமிக்க வைக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். சென்னை ரசிகர்கள் கிரிக்கெட் குறித்து மிகுந்த அறிவுடையவர்கள் என்றும், சேப்பாக்கம் மைதானத்தில் அவர்கள் எழுப்பும் கரகோஷம் தனக்கு கூடுதல் உத்வேகத்தைத் தருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
