ஐபிஎல் 2026 தொடரின் 55-ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. எனினும், போட்டியின் இடையே டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் கேட்ச் ஒன்றை தவறவிட்டது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் மிக எளிதான ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அக்ஷர் படேல் மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அக்ஷர் வேண்டுமென்றே இந்தத் தவறைச் செய்ததாகக் கூறி அவர் மீது புகார்கள் குவிந்தன. இந்த விவகாரம் குறித்து நுணுக்கமாக ஆராய்ந்தபோது ஒரு முக்கியத் தகவல் வெளிவந்தது. அக்ஷர் படேல் கேட்ச் நழுவவிட்ட அந்தப் பந்து ஒரு ‘ஃப்ரீ-ஹிட்’ (Free-hit) பந்தாகும். அதற்கு முந்தைய பந்தை டெல்லி பந்துவீச்சாளர் அகிப் நபி தார் ‘நோ-பால்’ ஆக வீசியிருந்தார்.
No way Axar Patel didn’t even try to catch such an easy catch.
Something about the IPL genuinely feels scripted nowadays.🤐 pic.twitter.com/Dh6YvflHoJ
— Abhishek Kumar (@Abhishek060722) May 11, 2026
ஐசிசி விதிகளின்படி, ‘ஃப்ரீ-ஹிட்’ பந்தில் ஒரு பேட்டர் கேட்ச் மூலம் அவுட் ஆக முடியாது. பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா பந்தை வானத்தை நோக்கி அடித்தபோது, அக்ஷருக்கு அது ‘ஃப்ரீ-ஹிட்’ என்பது தெரிந்திருந்தது. எப்படியும் பேட்டர் அவுட் ஆகப்போவதில்லை என்பதால், தேவையில்லாமல் கேட்ச் பிடிக்க முயற்சி செய்து விரலில் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அக்ஷர் படேல் அந்த கேட்சை பிடிக்கவில்லை என கிரிக்கெட் நிபுணர்கள் விளக்கியுள்ளனர். இது அவரது அனுபவத்தையும் நிதானத்தையும் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
பிக்சிங் புகாரில் இருந்து அக்ஷர் தப்பினாலும், பிசிசிஐ (BCCI) அவருக்குப் பெரும் அபராதத்தை விதித்துள்ளது. இந்தப் போட்டியில் டெல்லி அணி மெதுவாகப் பந்து வீசியதற்காக ( கேப்டன் அக்ஷர் படேலுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் டெல்லி அணி செய்த முதல் தவறு என்பதால் இந்த அளவுடன் அபராதம் நிறுத்தப்பட்டுள்ளது. புகார்களைத் தாண்டி அக்ஷர் படேலின் டெல்லி அணி பிளே-ஆஃப் ரேசில் இன்னும் நீடிப்பது அந்த அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
