ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் மற்றும் அணியின் ஒழுக்கம் குறித்துப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார்.
இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ், கடந்த 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்த சூழலில், அணியில் பெரும் ஒழுக்கமின்மை நிலவுவதாக ஒரு அறிக்கை வெளியானது. அதில், “கடந்த ஒரே வாரத்தில் பிரப்சிம்ரன் சிங்கின் உடல் எடை 10 கிலோ அதிகரித்துள்ளது. வீரர்கள் விடிய விடிய வீடியோ கேம் விளையாடுவதால் பயிற்சிக்கு வருவதில்லை. இதனால் அவர்கள் விமானங்களைத் தவறவிடுகிறார்கள்” எனப் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
There’s a difference between criticism & calculated misinformation. Healthy debate around the game is welcome, but the deliberate spread of fake narratives to damage individuals, the team, or the brand should not & will not be taken lightly. I urge everyone including verified… https://t.co/yeqbsTwLBd
— Preity G Zinta (@realpreityzinta) May 12, 2026
இந்த வதந்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் மற்றும் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இது குறித்து ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது, விமர்சனம் செய்வதற்கும், வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது. அணியின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய முட்டாள்தனமான வதந்திகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஊடகங்கள் தகவல்களை வெளியிடும் முன் பொறுப்புடன் உண்மையைச் சரிபார்க்க வேண்டும்.
சிறுபிள்ளைத்தனமான விளம்பரத்திற்காகப் பொய்யானக் கதைகளை உருவாக்குவது விளையாட்டிற்கு அழகல்ல என பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் செய்திகளைப் பகிர வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என மொத்தம் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்பில் அணி தீவிரமாக உள்ள நிலையில், இத்தகைய சர்ச்சைகள் கிளம்பியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
