குஜராத் மாநிலத்தில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உறைந்து போகச் செய்துள்ளது. தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 19 வயது இளம் பெண் ஒருவர், எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தைத் தொடர்ந்து, ஆறு பேர் கொண்ட மிருகத்தனமான கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்தச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் தனது நண்பருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகச் சிறிய விபத்து ஏற்பட்டு கீழே விழுந்துள்ளனர்.

அப்போது அந்தச் சூழலைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவர்களைச் சூழ்ந்துகொண்டு மிரட்டத் தொடங்கியுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணின் நண்பரைத் தாக்கி, அவரை அச்சுறுத்தி அங்கிருந்து விரட்டியடித்த அந்த வெறிபிடித்த கும்பல், ஆதரவற்று நின்ற 19 வயது இளம் பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஒருவர் பின் ஒருவராகத் தங்களது கொடூர புத்தியைக் காட்டியுள்ளது.

இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், தைரியமாக முன்வந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கிச் சம்பவத்தில் ஈடுபட்ட மிருக குணம்படைத்த குற்றவாளிகளைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்குச் சட்டம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்து குரல் கொடுத்து வருகின்றனர்.