தமிழகத்தில் அரசு உயர் அதிகாரிகள் பெரும்பாலானோர் தங்களது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை என்றும், இதனால் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவக் கட்டமைப்புகளின் மீது போதிய அளவிலான நம்பிக்கை ஏற்படுவதில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

தான் பயின்ற சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அடித்தட்டு மக்களின் முதன்மைத் தேவையாக விளங்கும் அரசு மருத்துவமனைகளின் தற்போதைய அவலநிலை மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு வரும் வேளையிலும், உயர் பதவிகளில் உள்ளவர்களே இதனைப் புறக்கணிப்பது ஏழை எளிய மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை உருவாக்குகிறது என்றும், இந்த எதார்த்த நிலை விரைவில் மாற்றியமைக்கப்பட்டு ஒட்டுமொத்தப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மருத்துவச் சேவைகள் சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

“>