திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக கூட்டணிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் நெல்லை மக்களே, உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களைத் தேடி வந்திருக்கிறேன்” எனத் தனது உரையைத் தொடங்கிய அவர், திமுகவிடம் முழு அதிகாரம் இருந்திருந்தால் தங்களை வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள் என்றும், தற்போது ஒரு ‘கேர்டேக்கர் கவர்மெண்ட்’ போல அதிகாரம் இல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் தான் இவ்வளவு எளிதாக மக்களைச் சந்திக்க முடிந்ததாகவும் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

மேலும், திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகளுமே வெளியார் பார்வைக்குத் தனித்தனியாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் விஜய்யைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கைகோர்த்துச் செயல்படுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

திமுகவின் ஊழல் பட்டியலைத் தான் வெளியிட்டதால் அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி தற்போது கலகலத்துப்போய் தனித்தனியாகச் சிதறி நிற்பதாகக் கூறிய விஜய், கூட்டணிக் கட்சிகளே ஒருவருக்கொருவர் வாக்கு அளிக்காத நிலை திமுகவில் நிலவுவதாகச் சாடினார். காங்கிரஸ் கட்சியைப் பணத்தைக் கொடுத்துத் தங்கள் பக்கம் இழுத்துவிட்டதாகக் கூறும் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டதாகவும், உண்மையான காங்கிரஸாரும் சிறுபான்மை மக்களும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற கொள்கையின் பக்கம் திரண்டு நிற்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அவங்க வீட்டிலேயே விசில் சத்தம் பலமாகக் கேட்பதால் என் மீது அவர்கள் காண்டோ காண்டு என இருக்கிறார்கள்” என்று அவர் நகைச்சுவையுடன் பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த ‘நெல்லை கர்ஜனை’ தமிழக அரசியலில் திமுக – பாஜக ஆகிய இரு தரப்பிற்கும் ஒரே நேரத்தில் விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.