பெங்களூர் ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமையா லே-அவுட் பகுதியில் மோகன்- கங்கா தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மோகனும், கங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. மோகன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் கங்காவுக்கும் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக மோகன் சந்தேகமடைந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கங்கா உன்னோட வாழ முடியாது எனக்கு கூறி 8 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மோகன் தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்றார். அப்போது கங்கா குழந்தையை காண்பிக்க முடியாது என கூறி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கங்கா குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோகன் நடு ரோட்டில் கங்காவை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த கங்காவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கங்கா உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.