இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடரத்தான் செய்கிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக மீனவர்கள் 24 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் தாக்கினர். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகரும் ஆந்திர துணை முதல்வரும் ஆன பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மீனவர்கள் 24 பேர் வங்கக்கடலில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு நாகை மீனவர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
