உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை, ‘அல்ட்ரா’ என்ற மனித உருவ (Humanoid) ரோபோ முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மனித உருவ ரோபோக்களுக்கான சிறப்பு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் ரோபோக்கள் கலந்துகொண்டு தங்களின் வேகத்தையும் ஆற்றலையும் நிரூபிக்கும் வகையில் தீவிரமாகப் போட்டியிட்டன.
இந்த அதிவேக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ‘அல்ட்ரா’ என்ற ரோபோ, 100 மீட்டர் தூரத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்தது. இதன் மூலம் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்து வந்த நிலையில், அந்த சாதனையை அல்ட்ரா ரோபோ முறியடித்துப் புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது.
மேலும் இதே போட்டியில் பங்கேற்ற ‘லைட்னிங்’ என்ற மற்றொரு ரோபோ 100 மீட்டர் தூரத்தை 9.47 வினாடிகளில் கடந்து உசைன் போல்ட்டின் சாதனையைத் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தது. மனிதர்களின் வேகத்தையும் தாண்டி ரோபோக்கள் நிகழ்த்தியுள்ள இந்த அதிவேக சாதனை, உலக அளவிலான விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
