கோலியிடம் பாபர் அசாம் ஜெர்சியை பெற்றுக்கொண்டதால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 3வது வெற்றியைக் கொண்டாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்தியா 30.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்தார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*), கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்..

இந்நிலையில் போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது ஜெர்சியில் கையெழுத்து போட்டு கொடுத்தார். கோலியிடமிருந்து பாபர் அசாம் 2 ஜெர்சியை பெற்ற  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இந்த புகைப்படத்தால் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

ஏ-ஸ்போர்ட்ஸிடம் பேசிய அக்ரம், டி-சர்ட்களில் விராட் கோலியின் கையெழுத்திடப்பட்ட ஜெர்சியை பெற்றதற்காக பாபர் அசாமை விமர்சித்தார். விராட் மற்றும் பாபரின் இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலானது. இதற்குப் பிறகு, அக்ரம் கோலியிடம் ஜெர்சியை ட்ரெஸிங் ரூமில் வாங்கியிருக்கலாம் என பாபருக்கு ஒரு முக்கியமான அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அக்ரம் கூறுகையில், “எல்லோரும் இந்த கிளிப்பை மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். ஆனால் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்திற்கு பிறகு உங்கள் ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பிறகு, இது தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும், திறந்த மைதானத்தில் செய்யக்கூடாது.  ‘இந்த புகைப்படங்களை பார்த்தபோது, ​​இன்று இதை செய்ய வேண்டிய நாள் இல்லை என்று நினைத்தேன். நீங்கள் அதைச் செய்ய விரும்பினால் – உங்கள் மாமாவின் மகன் உங்களிடம் கோலியின் சட்டையைப் பெறச் சொன்னால் – டிரஸ்ஸிங் ரூமில் ஆட்டம் முடிந்ததும் அதைச் செய்யுங்கள்”அகமதாபாத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியில் பார்க்கும்போது இப்படி செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு பிறகு பாபர் அசாம் கூறுகையில், “நாங்கள் நல்ல தொடக்கம் பெற்றோம். நானும் இமாமும் ஒரு நல்ல கூட்டணியை உருவாக்கினோம். ரிஸ்வானும் நானும் ரிஸ்க் இல்லாமல் விளையாட முயற்சித்தோம். ஆனால் எங்கள் பேட்டிங் திடீரென சரிந்தது. நாங்கள் நன்றாக முடிக்கவில்லை. நாங்கள் தொடங்கியபோது நாங்கள் 280 முதல் 290 ரன்கள் எடுப்போம் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதிய பந்தில் வீசும் போது கூட எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பந்து வீசவில்லை. ரோகித் சர்மா அபாரமான இன்னிங்ஸ் ஆடினார்” என தெரிவித்தார்.