இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் ரசிகர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் புதிய குறைவு. விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது தெரிந்ததே. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் டிரஸ்ஸிங் அறைக்கு வந்ததும் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பதிவு செய்துதான் உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் நடத்தைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்னும் பத்து நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2 போட்டிகள் (23ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும்) விளையாட சென்னை வரவுள்ளனர். எனவே தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் வீரர்களை சிறப்பாக வரவேற்போம் என்று கூறி வருகின்றனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு சென்னையில் ரசிகர்களின் கைத்தட்டல் கிடைத்துள்ளது. ஆனால் 2023ல் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரரை கிண்டல் செய்யும் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பப்பட்டதாக ஒருவர் கூறியுள்ளார். இந்தப் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு கோலி அவர் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக கொடுத்து தனது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்.

உலக கோப்பையில் 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி :

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு மோதியது. 1,32,000 பேர் அமரும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவிற்கே ஆதரவு அதிகமாக இருந்தது. மைதானமே நீலக்கடல் போல காட்சியளித்தது. மிகவும் முக்கியமான   போட்டியில் கலந்து கொள்ள ஒரு சில பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சொந்த அணியானது (இந்தியா) அதிகபட்சமாக பார்வையாளர்களின் ஆதரவுடன் களமிறங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 191 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும், இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபீக் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீவ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 30.3 ஓவர்களில் 192 ரன்கள் என்ற இலக்கை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 63 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 86 ரன்கள் எடுத்தார்.  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (53*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். மேலும் கே.எல் ராகுல் 19* ரன்களும், சுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களும் எடுத்தனர்.. பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. மேலும் இதன் மூலம் ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.